Tuesday, May 29, 2018

யாரோ பார்க்கிறார்கள் !




இப்போதும்
யாரோ எங்கோ 
அவள் பெயரை
உச்சரித்தால் விரல் நகத்திற்குள் 
மின்சாரம் பாய்ந்தார் போல சிலிர்க்கிறது  !

இதைச் சொன்னால்
மற்றவர்கள்  சிரிக்கிறார்கள் 
நீ பார்த்த அழகு
இப்போது அவளிடம் இல்லை
காலம் களவாடி விட்டது என்கிறார்கள் 

அவள் அழகு எப்போது 
வெளியே தெரிந்திருக்கிறது 
இவர்கள் பார்க்கும் போது ?

Wednesday, March 7, 2018

கடைசிப் பக்கம் ...













காதல் பூக்கள் சருகானாலும்
அதன் மணத்தை இழப்பதில்லை !



காதற் பொழுதுகள் கடந்த காலமானாலும்
நிகழும் காலத்தின் சுவாசங்கள் அவை !



காதலித்த பெண்ணுக்கு வயது தொலைந்தாலும்
ஆழ்மனதில் அவளே நிரந்தர அழகு !



காதல் வயதின், ஹார்மோன் கலாட்டாதான்
ஆனால் அதுதான் மொத்த வாழ்வின் கொண்டாட்டம் !



காதல் பெண் எதிர்பட்டால்
தொலைந்து போன கவிதை நூலின்
கடைசிப் பக்கம் மீண்டு விட்டதாக
கற்பனை கரைபுரள்கிறது !

Wednesday, December 6, 2017

குருவே போதும் !




இறைவனை விட எனக்கு
குருவையே பிடிக்கும்

முகம் தெரியாத ஓவியன்
எனக்கு இறைவன் என்றால்
முகம் தெரிந்த
மருத்துவன் குருவே எனக்கு

வாழ்வின் எது கிடைக்குமோ
அதை அனுபவி என்பான் இறைவன்
வாழ்வையே அனுபவி
என்கிறார் என் குரு

காமத்தில், காதலில்
தடுமறிய போதெல்லாம்
பாவம் என்றது இறைவன் 

சிந்தனை தோள்கொடுத்து
தாங்கியவரே குருவானவர்

இறைவனை அறியாமல்
திசைமாறிய பயணத்தில்
சென்றதெல்லாம் தெரியாத ஊர்கள்
தெரியாத திசையில் கூட
வாழச்கொல்லி தந்தது
குருவின் ஆசியே

இறைவன்
வாழக்கற்று கொடுக்கிறார்
குருவோ
வாழ்வையே கற்றுக்கொடுக்கிறார்.

என் தாய்
தந்தையை இவரெனெ காட்டினாள்
தந்தை குருவை காட்டினார்
குருதான் இறைவனை காட்டினார்
ஆனால்
புரியாத இறைவன் என்ற உயிரைவிட
புரிந்த குருவென்ற உருவம் போது எனக்கு

பிறவிப் பெருங்கடலில்
கடவுள் தோணியாக இருக்கிறார்
குருவோ துடுப்பாக இருக்கிறார்
எனக்கு
துடுப்பே பிடிக்கிறது .

இறைவன் கிணறு என்றால்
அதில் இறைக்கும் வாளி குருவே

அவரே எனக்கு போதும்  

Saturday, December 2, 2017

மிச்ச வாசனை ...



நாம் எங்கோ பிறந்தோம்
இங்கு ஏன் பார்த்தோம்
காலத்தின் கறுப்புத்தினங்களா அவை  ?

நாம் சந்தித்த  காலங்கள்
கை மணல் போல
சறுக்கி சரிவதற்குள் ..

பிரிவின் அறுவடை
பிரிந்து போன காட்டாறாய்
தடம் இழந்து மடம் மாறியது

நாம் கூடியிருந்த  போது
தணியாத அகம்பாவச் சேறு
பிரிந்து தவித்த போது  அழுதது..

காலம் என்ற காற்று அடித்து
பறித்தது போக உன் நினைவின் மிச்ச
வாசனை வரும்போதெல்லாம்..

நான் கடவுளைக் கேட்பேன்
ஏன் என்னைப் படைத்தாய்
எனக்குள் மனதை விதைத்தாய் என்று ?

எவனுக்காகவோ  வயிற்றிலும்,
உன்னையோ மனசிலும்
ஏன் சுமக்கிறேன் என்று ..

Friday, December 1, 2017

அப்பாக்களும் பாவம்தான் !






ஒரு வீட்டில்,
அம்மாவின் ஆயிரம் துன்பங்ளுக்கும்
அப்பாவே காரணம் என்பார்கள் .

படிக்காத பிள்ளையென்றால்
அப்பன் புத்தி என்பதாய்
அனாயசமாய் புகார் வாசிப்பார்கள்

வீட்டின் வறுமைக்கு
விசேச காரணமாயும்
அப்பாவே பலியாடாய் நிற்க வேண்டும்.


அலுவலகத்தில் ,
சமூகத்தில் ,
பெற்ற வீட்டில்,
உறவின் முன்,
நண்பர்களிடத்தில்,


இப்படி
அப்பாவுக்கு ஆயிரம்
முகங்கள் உண்டு
ஆனால் ,

அவருக்கு
ஒரே ஒரு மனசுதான் இருக்கிறதே
என்றாவது அதற்கும்
வலிக்கும் என்று
யாராவது நினைத்ததுண்டா ?





Thursday, November 30, 2017

யாரென்று தெரியவில்லை





என்னை உங்கள் யாருக்கும் 
பிடிக்க மாட்டேன்கிறது !

முன்னே சிரிக்கிறீர்கள் 
பின்னே குத்துகிறீர்கள்

வலிய வந்து உதவினால்
உள்நோக்கம் என்கிறீர்கள் ! 

ஒதுங்கி நின்றால்
இதயமற்றவன் என்று ஏசுகிறீர்கள் !

உங்களிருந்து விலக முடியவில்லை 
உங்களில் யார் நான் என்றும்
தெரியவில்லை !

நீங்களும் என்னைப்போலவே 
யாரென்று தெரியாமல் இருப்பதால் !


Saturday, September 2, 2017

மழைக்காதல் !





வெகு நாளாகி விட்டது 
என் மனசுக்குள் வாழும் 
காதலோடு பேசி... 

இன்று போல அன்றொரு மழைக்காலம் 
எதிர்பாராத காலத்தின் சோதனையில் 
ஒழுகும் கூரைக்குள் வெகு அருகே நாங்கள் . 

இதற்கு முன் நாங்கள் பார்த்துக்கொண்டதே இல்லை 
ஆனால் இப்போதோ இது ஏழாவது ஜென்மத் தொடர்பாய் 
அந்த மழைப் பொழுது செம்புலப் பெயலாக்கி விட்டது. 

இருவரின் உடலும் 
வயதுக்கு வந்து வெகுநாளாகியிருந்தது 
ஆனால் மனது விரல் சூப்பிக்கொண்டுதான் இருந்தது. 

காரணமே இல்லாமல் விழிகள் நான்கும் 
தூரத்தில் தொலைந்து தொலைந்து மீண்டது 
திசையறியாத குழந்தையைப் போல 

சின்னதாய் ஒழுகும் கூரைக்குள் இருந்தாலும் 
எங்கள் பார்வையாலே முழுவதுமாக 
நனைத்துக் கொண்டுதான் இருந்தோம். 

மலை நேரத்து விருந்தாளி போல மழை 
எப்போது போகும் என்று தெரியாவிட்டாலும் 
நாங்கள் நிரந்தரச் சொந்தாமாகிக் கொண்டு இருந்தோம் 

இடியும் மின்னலும் பூமியையும் வானத்தையும் 
கிழித்துப் போட்டுப் பயத்தை 
கிளறிக்கொண்டு இருந்தது 

இருண்டு கொண்டு இருக்கும் அந்த இடத்தில் 
மின்னல், கம்பிமத்தாப்பைக் கொளுத்திப் போட்டு 
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள உதவிக்கொண்டு இருந்தது 

எவ்வளவு நேரம் நாங்கள் பார்த்திருந்தோம் காலம்தான் அறியும் 
அந்த மழை நேரத்து இடியாய் அவள் எங்குப் போய்ச் சேர்ந்தாளென்று
இன்று வரை தெரியாது !